அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசில் பரபரப்பு கொடுமையான இந்த பதவியில் இருந்து விடுவிங்க!: ராஜஸ்தான் முதல்வரிடம் அமைச்சர் வேண்டுகோள்

ஜெய்ப்பூர்: இந்தக் கொடுமையான அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் அம்மாநில  விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் அசோக் சந்த்னா வெளியிட்ட பதிவில், ‘முதல்வர் அவர்களே! இந்தக் கொடுமையான அமைச்சர்  பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். எனது துறை சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் முதன்மைச் செயலாளர் குல்தீப் ரங்காவிடம் ஒப்படைக்க வேண்டும். காரணம் என்னவென்றால், அவரே எல்லா துறைகளுக்கும் அமைச்சராக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். அமைச்சர் இவ்வாறு கருத்து கூறியதின் பின்னணி குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ராஜஸ்தான் பழங்குடியினத் தலைவரும், எம்எல்ஏவுமான கணேஷ் கோக்ரா என்பவரின் நிலப் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகளுக்கும், எம்எல்ஏ தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

அதன் பின்னணியில் தற்போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருக்கும் கோக்ரா, தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி கடந்த 18ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ‘வரும் 2023ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகவே கப்பல் (ஆட்சி) மூழ்க ஆரம்பித்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில், தற்போது அமைச்சர், எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது மாநில காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: