தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.

இந்நிலையில்,  ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார பெருமன்ற மாநாட்டில்  தமிழக குழு பங்கேற்ற பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு தொழில்துறை சார்பாக சுவிஸ்சர்லாந்து உலக பொருளாதார மன்ற நிகழ்வில் 50 நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினேன்.

உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சந்திப்புகள் நடைபெற்றன. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குவது குறித்து பேசப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சுவிஸ் பயணம் அமைந்தது. பொருளாதார வளர்ச்சியுடன், சமூக வளர்ச்சியையும் அடையும் வகையில், திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

Related Stories: