கோழிக்கோடு விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமானநிலையத்தில் 6வது முறையாக 8 கிலோ தங்கம் கடத்திய டெல்லியை சேர்ந்த விமான ஊழியரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர். கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்ற போதிலும் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

தங்கத்தை கடத்துவதற்கு விமான ஊழியர்களும், விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஒருவரிடம் இருந்தும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த விமானத்தில் பணிபுரியும் டெல்லியை சேர்ந்த நவநீத் சிங் என்பவரிடம் சுங்க இலாகாவினர் சோதனை நடத்தினர்.

இதில் அவரது ஷூவுக்குள் இரண்டு கிலோவுக்கு மேல் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகாவினர் அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் இதுவரை 6 முறை இதேபோன்று 8 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: