திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.1.10 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 15 பேர் கைது

சித்தூர்: திருப்பதியில் இருந்து வேலூர், சென்னைக்கு கடத்திய ₹1.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வேலூருக்கு செம்மரக்கட்டைகள் கடத்துவதாக சித்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 36 செம்மரக்கட்டைகள் கடத்தியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதேபோல் குடிபாலா இன்ஸ்பெக்டர் சீனிவாசரெட்டி தலைமையில் சித்தூர்-ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேரை பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில் அவ்வழியாக ஒரு மினி வேன் வந்தது. அந்த வேனையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தண்ணீர் கேன்களுக்கு அடியில் 35 செம்மரக்கட்டைகள் சென்னைக்கு கடத்தியது தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், மினி வேனுக்கு தகவல் தெரிவித்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கடத்தலில் மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான 71 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள மினி வேன், பைக், ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி (25), காசி (37), தேவராஜ் (37), ராதாகிருஷ்ணன் (37), செல்வம் (21), குப்புசாமி (30), பிரசாந்த் (26), ஜெயகோபால் (23), உதய் (26), சத்தியராஜ் (26), பாக்கியராஜ் (24) மற்றும் சென்னையை சேர்ந்த லட்சுமிபதி (53), சாமுவேல் (26), இவரது தம்பி பிரவீன்குமார் (29), முத்துராஜ் (53) ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: