நாரணாபுரம் ஊராட்சிக்கு ‘மாஸ் கிளீனிங்’ அவசியம்

சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் சாக்கடை தூய்மைப்படுத்தப்படாமல், சாலைகளில் குப்பை அகற்றப்படாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. இதைத் தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் ‘மாஸ் கிளீனிங்’ செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் நாரணாபுரம், புதூர், பர்மாகாலனி், முருகன் காலனி, போஸ் காலனி என பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் எங்குமே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் குப்பையை சரிவர அகற்றுவதில்லை. எங்கு பார்த்தாலும் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. பர்மா காலனி, போஸ் காலனி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதையில் குப்பைகள் நிறைந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே குளம் உள்ளது. குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த குளம் துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்சமயம் குளத்தில் தண்ணீர் இருந்தும் பாசிகளால் நிறைந்துள்ளது.தண்ணீர் எதற்கும் பயன்படாமல் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதனால் அலுவலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பர்மா காலனியிலிருந்து போஸ் காலனி செல்லும் சாலையில் சிதறிக்கிடக்கும் குப்பைகளில் மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளைத் தேடி கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது.

இதனால், கொசு உற்பத்தியாகி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் மாஸ் கிளீனிங் முறையை நடைமுறைப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் மேலும் குளத்தினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: