மாநிலங்களவை தேர்தல்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடக்கூடிய திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, திமுகவின் வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என்.ராகேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனிடையே வேட்புமனு தாக்கலானது கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என்.ராகேஷ்குமார், சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலின் போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: