திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்-முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் பங்கேற்பு

திருமலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன் கலந்து கொண்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் விசாக சாரதா பீடாதிபதி  ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆகியோர் இணைந்து மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்தனர்.

இதில்  தீபாராதனை, கும்பாராதனை, நிவேதனம், யாகம், மகாபூர்ணாஹுதி ஆகியன நடத்தப்பட்டன.   காலை 8.50 மணி முதல் 9.05 மணி வரை பிராண பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகம்  நடந்தது.  அதன்பின் பிரம்மகோஷம், வேடசத்துமுறை மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. மாலை  சீனிவாச கல்யாணமும் அதனை தொடர்ந்து உற்சவர்கள்  ஊர்வலம், கைங்கர்யம், ஏகாந்த சேவை நடைபெற்றது. இதில் விசாக சாரதா பீடத்தின் வாரிசு ஸ்வாத்மா நந்தேந்திர சரஸ்வதி, வேணுகோபால் தீட்சிதர், ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணுபட்டாச்சார்யா உள்ளிட்ட அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி, ‘ஆந்திரப் பிரதேச முதல்வர்  ஜெகன் மோகன் நாடு முழுவதும் பெருமாள் கோயில்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்நாட்டு பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரே மதம் இந்து மத அமைப்பாகும்.  திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொலைதூர இடங்களில் இருந்து திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களை கட்டி வருகிறது. ஏழுமலையான் ஆசீர்வாதத்துடன், ஒடிசா மக்கள் அனைத்து துறைகளிலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆந்திர கவர்னர் பிஷ்வபூஷன் ஹரிஞ்சந்திரன் தொலைதூரத்தில் இருந்து திருமலைக்கு சென்று  தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக புவனேஸ்வரில் கோயில் கட்டுவது ஒடிசா மாநில மக்களின் அதிர்ஷ்டம். திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் போனதே என யாரும் மனம் தளர மாட்டார்கள்.  புவனேஸ்வரில் அடிக்கடி சுவாமியை தரிசிக்கலாம்’ என்றார்.

அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பேசியதாவது: ‘இந்து மத ஆச்சாரத்தின்படி  நாடு முழுவதும் இந்து சம்பிரதாயத்தைபரப்பும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன.  இதுவரை, தெலுங்கு மாநிலங்களில் பின்தங்கிய பகுதிகளில் 501 கோயில்களை தேவஸ்தானம் கட்டியுள்ளது.  அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1,130 கோயில்கள் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  இதேபோல், பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த 6,000 பக்தர்களுக்கு இலவச போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை வழங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, நம் நாட்டு பசுக்களை  பாதுகாக்கவும், அனைத்து கோயில்களிலும் பசு பூஜை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கோயிலுக்கு  கோமாதா திட்டத்தின்கீழ் இதுவரை 171 கோயில்களுக்கு பசுக்கள் மற்றும் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  வாரி கோயிலில் கோவிந்தனுக்கு இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு பிரசாதங்கள் தயார் செய்யப்படுகிறது.

இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி தொலைக்காட்சி இயக்குகிறது. கொரோனா காலக்கட்டத்தில், ஏப்ரல் 2020 முதல் உலகில் உள்ள அனைவரின் நலம்  கருதி பல பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பக்தர்களிடமிருந்து சிறந்த வரவேற்பை பெற்றது. வரும் நாட்களில் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெருமாள்  கோயில்கள் கட்டப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: