வெளிநாடு கடத்த இருந்த ரூ.2 கோடி உலோக சிலைகள் மீட்பு-மயிலாடுதுறை அருகே ஒருவர் கைது

கும்பகோணம் : மயிலாடுதுறை அருகே வெளிநாடு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 700 ஆண்டுகள் தொன்மையான 2 உலோக சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைப்பற்றினர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் கடத்தி செல்ல பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின்படி, ஐஜி தினகரன் வழிகாட்டுதல்படி, கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில், எஸ்.ஐ சின்னதுரை மற்றும் போலீசார் மதிக்குமார், கோபால், குமாரராஜா, ஜெகதீஷ், ராம்குமார், பிரவீன், செல்வக்குமார் ஆகியோர் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிலை கடத்தல்காரன், 2 உலோக சிலைகளுக்கு ரூ.2 கோடி விலை பேசினார். இதையடுத்து சிலை கடத்தல்காரனை நம்ப வைத்து சிலைகளை காண்பித்தவுடன் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்(32) என்பதும், வெளிநாடுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த புத்தமத பெண் கடவுள் உலோகச்சிலை , அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை என தெரிய வந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டது.

Related Stories: