அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்

அரக்கோணம்: சூனியம் வைத்ததாக கூலிப்படையினரை ஏவி தம்பதியை கொலை செய்து அரக்கோணம் அருகே சடலங்களை வீசி சென்று உள்ளனர். இது தொடர்பாக மருமகனின் தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசங்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52), பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராணி (47). மகள் சசிகலா, மகன் பெருமாள். சசிகலாவுக்கு திருத்தணி பகுதியை சேர்ந்த சாய்ராம் என்பவருடன் திருமணமாகி குடும்ப பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது பெற்றோர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

மேலும், குடும்ப செலவுக்காக பலரிடம் மாணிக்கம் கடன் வாங்கி உள்ளார். இதனை அடைக்க முடியாமல் திணறி வந்துள்ளார். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராம பகுதியில் உள்ள மின்னல் ஏரி கால்வாய் முட்புதரில் மாணிக்கம், ராணி தம்பதியினர் கடந்த 23ம் தேதி சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணிக்கம் மற்றும் சசிகலா கொலை செய்யப்பட்டு சடலங்களை வீசியிருப்பது தெரிய வந்தது.  தனிப்படையினர் கொலை செய்யப்பட்ட மாணிக்கத்தின் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து, அதில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாணிக்கம், ராணி தம்பதியின் மகள் சசிகலாவிற்கும் அவரது கணவர் சாய்ராமுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்துள்ளனர். இந்நிலையில், சாய்ராமிற்கு உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பும் ஏற்பட்டதாம். இதற்கு காரணம் மாணிக்கம் குடும்பத்தினர் எனவும், மேலும் சசிகலாவின் தாய் ராணி சூனியம் வைத்திருக்கலாம் என்றும் சாய்ராம் குடும்பத்தினர் கருதினர். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் அண்ணியின் பெற்றோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக, திருத்தணி மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கூலிப்படை கும்பலை அணுகியபோது ரூ.4 லட்சம் கேட்டதாகவும், அதற்கு ரூ.3.25 லட்சம் கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் தரணி கூறிய ஆலோசனைப்படி, கூலிப்படையினர் மாணிக்கத்தை தொடர்பு கொண்டு, உங்களுக்கு கடன் பிரச்னை இருப்பது உறவினர் மூலம் தெரிய வந்தது. சோளிங்கரில் ஒருவர் தாராளமாக கடன் தருகிறார். எங்களுடன் வந்தால், பெற்று தருகிறோம் என கூறவே, அதை நம்பி மாணிக்கம் தம்பதியினர் சோளிங்கருக்கு கடந்த 22ம் தேதி வந்தனர். அங்கிருந்த கூலிப்படையினர் அவர்களை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

திருத்தணி அருகே கன்னிகாபுரம் பகுதியில் கார் சென்றபோது, தம்பதியர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடிக்க முயன்றனர். அப்போது, தகராறு மற்றும் கைகலப்பு ஏற்படவே ஆத்திமடைந்த கூலிப்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். காரை நிறுத்தி இருவரையும் கீழே இழுத்துப் போட்டு, எட்டி, எட்டி உதைத்து கொன்றுள்ளனர். பின்னர், தம்பதியின் சடலங்களை அரக்கோணம் அருகே  கைலாசபுரம் சாலை ஏரி முட்புதரில் வீசி சென்றள்ளனர் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருத்தணி பகுதியை சேர்ந்த சாய்ராமின் தம்பி தரணி (25), கூலிப்படையை சேர்ந்த சுனில்குமார் (32), சந்திரன் (40) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: