கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் பயங்கரம் தென்னை மட்டையால் அடித்து கல்லூரி மாணவன் கொலை: உறவினர் கைது; 2 பேருக்கு வலை

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் கல்லூரி மாணவன் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சின்ன லத்தேரி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சரண்குமார் (20). இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் சரண்குமார் தனியாக அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி சரண்குமாரின் மாமா ரமேஷின் மகள் வாலிபர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். இதனை பார்த்த சரண்குமார், மாமா ரமேஷிடம் கூறியுள்ளார். அதற்கு ரமேஷ்,  ‘‘எனது மகள் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டாள்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் சரண்குமாரை ரமேஷ் அடித்து உதைத்துள்ளார்.

இதுகுறித்து சரண்குமார் தனது பெற்றோருக்கு தெரிவிக்க, நேற்று முன்தினம் அவரது தாய் சின்ன லத்தேரிக்கு சென்று ரமேஷிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதில் ரமேஷ், அவரது மனைவி சக்தீஸ்வரி, மகன் நவீன் ஆகியோர் சரண்குமார் மற்றும் அவரது தாயை தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சரண்குமார் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரது தாய் லேசான காயமடைந்தார். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு நேற்று காலை சரண்குமார் இறந்தார். புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்தனர். அவரது மனைவி, மகனை தேடி வருகின்றனர்.

Related Stories: