கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில், பாஜ மாவட்ட நிர்வாகி பங்கேற்ற விவகாரத்தை தொடர்ந்து, மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில், மதுரையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இலவச கண் பரிசோதனை முகாம், கடந்தாண்டு டிச. 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி, மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகம், மதுரை பணிமனை அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதி அல்லாத மதுரை பாஜ மாநகர் மாவட்டத்தலைவர் சரவணனை அழைத்து தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த 25ம் தேதி கண்டன அறிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக நிர்வாகம் சென்னையில் இருந்து அறிக்கை ஒன்றை நேற்று  வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இலவச கண் பரிசோதனை முகாம் 24ம் தேதி அரசு விரைவு போக்குவரத்து கழகம், மதுரை கிளையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் தொண்டு நிறுவனத்தின் குழு உறுப்பினரான ஒரு கட்சி பிரமுகர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு கண்ணாடி வழங்கி உள்ளார். இந்நிகழ்வில் கிளை மேலாளர் கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இவ்வாறான அரசு பணிமனை விழாவில், கட்சி பிரமுகர் கலந்து கொள்ள அனுமதித்த கிளை மேலாளர் ஏ.அபிமன்யுவை தற்போது சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: