தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் இன்னும் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 20 ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்களை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இன்னும் 10 மாத காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்கப்பட்டு விடும். மொத்தம் 4 கட்டங்களாக இந்தப் பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் நான்காவது கட்ட பணிக்கான ஒப்பந்தம் மே 27 ம் தேதி (இன்று) பிற்பகலில் கையெழுத்தாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் ஒருசில தினங்களில் இந்தப் பணியைத் தொடங்கி வைக்க இருக்கிறார். அடுத்த பத்து மாத காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும். இதன்மூலம் 12 ஆயிரத்து 525 ஊராட்சி பகுதிகள் முழுமையாக இந்த திட்டத்தில் பயன்பெறும்.  நாகர்கோவில் அருகே கோணம்  என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: