கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி டீக்கடைக்காரர் பலி: தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மகன்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி ஆருற்றுபாறை பாஜாரில் டீக்கடை நடத்தி வந்தவர் ஆனந்த் (46). நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கூடலூர் அருகே கோவிந்தன் கடை என்னும் இடத்தில் எதிரே வந்த காட்டு யானை, ஆனந்தை தாக்கி மிதித்து கொன்றது. அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர். இதனைத்தொடர்ந்து அங்கு குவிந்த கிராம மக்கள் ஆனந்தின் சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.

கூடலூர் ஆர்டிஓ சரவண கண்ணன், எம்எல்ஏ பொன் ஜெயசீலன் மற்றும் போலீசார், கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கும்கிகள் வரவழைத்து காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒலிபெருக்கி மூலம் உறுதியளித்தபின் அவர்கள் கலைந்துசென்றனர். உடனடியாக அப்பகுதிக்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தந்தை இறந்த சோகத்திலும் ஆனந்தின் மகன் கோகுல் நேற்று ஆரூற்றுபாறை அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுதினார். அவருக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். அதேசமயம் காட்டு யானை நடமாட்டம் காரணமாக 2 மாணவிகள் சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories: