சீனா விசா முறைகேடு விவகாரம் கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் விசாரணை: டெல்லியில் சிபிஐ கிடுக்கிப்பிடி

புதுடெல்லி: சீனா தொழிலாளர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்து ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் நேற்று எட்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் மீது கடந்த வாரம் புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதில், ‘கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரையில் பஞ்சாப்பில் இருக்கும் ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலையில் நடந்த பணிக்காக சட்ட விரோதமாக சீனா நாட்டில் இருந்து 263 பேர் இந்தியாவுக்கு அழைத்து வர முறைகேடாக விசா வாங்கி கொடுக்க கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும், இதே காலக்கட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பணப்பரிவர்த்தனையை கார்த்தி சிதம்பரம் செய்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உட்பட 9 இடங்களில்  வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 17ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் சொந்த வேலை காரணமாக லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் டெல்லி திரும்பினார்.

இதையடுத்து, சீனா விசா விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ நேற்று முன்தினம் மாலை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம், ‘263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்து, அதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றப்பட்டது எப்படி? என்பது உட்பட பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, சுமார் எட்டு மணி நேரம் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

* அமலாக்கத்துறைக்கு தடை

சீனா விசா விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தரப்பிலும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கார்த்தி சிதம்பரத்தை மே.30ம் தேதி வரை கைது செய்யக் கூடாது’ என இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இன்றும் விசாரணை

கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் என் மீது போடப்பட்டுள்ள வழக்கு என்பது பொய்யானது. இது நமத்து போன பட்டாசு போன்று வேடிக்கையாக உள்ளது. உண்மையை கூற வேண்டுமானால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். சீனா விசா தொடர்பாக இரண்டாவது நாளாக நாளையும் (இன்று) வர வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை (இன்று) மீண்டும் நான் நேரில் ஆஜராகி அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்’ என்றார்.

Related Stories: