இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மாஜி பிரதமர் மகிந்தாவிடம் போலீஸ் விசாரணை: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு

கொழும்பு: இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியது தொடர்பாக, முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்ற காரணங்களால் இலங்கை அரசு திவாலாகி இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மூலம் கிடைத்த வருவாய் அடியோடு நின்று விட்டது. பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க இவர் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்திய அரசும் இலங்கைக்கு உதவி வருகிறது. இந்நிலையில், மகிந்த ராஜபக்சே பதவி விலகும் முன்பாக, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படை ஆட்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார். மக்கள் கொடுத்த பதிலடி காரணமாக, இலங்கை போர்களமானது. நாடு முழுவதும் ஆளும் கட்சியை சேர்ந்த 78 எம்பி.க்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதனால், மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் தப்பி தலைமறைவானார்.

இந்நிலையில், கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்த வன்முறை, தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கை போலீசார், வன்முறை தூண்டி விட்டது தொடர்பாக ஏற்கனவே பல ஆளும் கட்சி எம்பி.க்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த  தாக்குதல் தொடர்பாக மகிந்தவிடமும் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று முன்தினம் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. வன்முறை தொடர்பாக மகிந்தவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.  

* ஜப்பான் நிதியுதவிக்காக காத்திருக்கும் கோத்தபய

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்த ‘ஆசியாவின் எதிர்காலம்’ 27வது சர்வதேச மாநாட்டில் காணொலி மூலம் இலங்கை அதிபர் கோத்தபய பேசுகையில், ‘‘இலங்கையின் வளர்ச்சிக்கான முக்கிய கூட்டாளிகளில் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது. ஜப்பானிடம் இருந்து குறுகிய கால செலவுகளுக்காக நிதியுதவியை பெறுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருளை இறக்குமதி செய்வது போன்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எங்களுடைய நண்பர்களின் உதவி அவசரமாக தேவைப்படுகிறது,’’ என்றார். இலங்கைக்கு ஜப்பான் ரூ.11,250 கோடி நிதி வழங்க உள்ளது. இந்த நிதி இலங்கை அரசுக்கு நேரடியாக வழங்காமல் யுனிசெப் மூலம் வழங்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: