சாதனை ஒருபுறம்; வேதனை மறுபுறம் பள்ளிக்கு நடந்து செல்லும் 48 சதவீதம் மாணவர்கள்: ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியா என்னதான் பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும், இந்தியாவில் 48 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 730 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரத்து  பள்ளிக்கூடங்களில் 3,5,8ம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களிடம் பல்வேறு தகவல்களை திரட்டும் வகையில் ஒன்றிய கல்வித்துறை சார்பில், ‘தேசிய  அளவிலான சாதனை ஆய்வு- 2021‘ நடத்தப்பட்டது. இதில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

* நாட்டில் 48 சதவீத மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்.

* 18 சதவீத மாணவர்கள் சைக்கிளிலும், வெறும் 8 சதவீதம் பேர் பள்ளி வாகனத்திலும் செல்கின்றனர்.

* அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகளில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை தலா 9 சதவீதமாகும். 18 சதவீதத்தினர் இரு சக்கர வாகனத்திலும், 3 சதவீதத்தினர் நான்கு சக்கர வாகனத்திலும் பள்ளிக்கு வருகின்றனர்.

* 87 சதவீத பள்ளிகள் மாணவர்களுக்கு பாடங்களை கற்று தருவதற்கான உதவி அளிப்பது எப்படி என்பது குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்கள் அளிக்கின்றன. இந்த விஷயத்தில் பெற்றோர்களிடம் இருந்து உதவி எதுவும் கிடைப்பது இல்லை என்று 25 சதவீத பள்ளிகள் தெரிவித்துள்ளன.

* கணிதம், மொழிபாடங்கள், அறிவியல், சமூக அறிவியல்,ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் பற்றி இதில் கேட்கப்பட்டன. இந்த ஆய்வில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அனைத்தும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால்(என்சிஇஆர்டி) தயாரிக்கப்பட்டன. இது 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.

ஆய்வில் தெரிய வந்துள்ள மற்ற சில அம்சங்கள்:

* 44 சதவீத பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு போதுமான இடவசதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

* புதிய கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பு, விவாதங்களில் 58 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

* 65 சதவீத ஆசிரியர்கள் அதிக வேலை பளு இருப்பதாக உணர்கின்றனர்.

Related Stories: