தூசி மண்டலமாக இருந்த ஓஎம்ஆரில் புதிய தார் சாலை: மக்கள் மகிழ்ச்சி

திருப்போரூர்: தூசி மண்டலமாக இருந்த ஓஎம்ஆர் சாலையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இதனால் செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை, ஓஎம்ஆர் சாலை, நான்கு மாடவீதிகள், சான்றோர் வீதி, வணிகர் வீதி, திருவஞ்சாவடி தெரு உள்பட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை குழாய்கள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் கந்தசுவாமி கோயிலில் தேர்த் திருவிழா நடந்ததால், நான்கு மாடவீதிகள் மட்டும் சீரமைக்கப்பட்டது. மற்ற சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. குறிப்பாக ரவுண்டானா முதல் இள்ளலூர் சந்திப்பு வரை ஓஎம்சாலை முழுவதும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, சரியாக மூடாமல் தார் சாலைகள் பெயர்ந்து மிக மோசமாக காணப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரை அழைத்து வந்த திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில், அமைச்சர்கள் பார்வையிட்டு அக்டோபர் 2022க்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முடிக்க உத்தரவிட்டு, பணிகளை முடுக்கி விட்டனர். இதை தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் மட்டும் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து நெடுஞ்சாலைத்துறை வசம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், திருப்போரூர் ரவுண்டானா முதல் திருக்குளம் வரை முதற்கட்டமாக ஓஎம்ஆர் சாலை புதியதாக அமைக்கப்பட்டது. சாலை போடும் பணியை திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பார்வையிட்டார். இந்த புதிய சாலை அமைக்கப்பட்டதால் தூசி மண்டலமாக இருந்த திருப்போரூர் ஓஎம்ஆர் சாலை புதிய பொலிவு பெற்றுள்ளது. மேலும், தனது கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க உத்தரவிட்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தார். புதிய சாலை அமைத்த தமிழக அரசுக்கு திருப்போரூர் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories: