காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் விழுந்த மின்கம்பங்கள்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயில், நேற்று காலை முதல் உக்கிரமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ச்சியான காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பஸ் நிலையம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவாள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், பெரியார் நகர், வேலூர் செல்லும் சாலை, காந்தி ரோடு, காமராஜர் வீதி இருபுறங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை இடைவிடாமல் பெய்தது. இதில், தேவரியம்பாக்கம் உள்பட சுற்று வட்டார கிராமங்களில் ஆங்காங்கே, சாலையோரம் இருந்த ஒருசில மரங்கள் வேருடன் சாய்ந்தன. குறிப்பாக, தேவரியம்பாக்கம் கிராமத்தில் மின் கம்பங்கள் அடுத்தடுத்து சூறைக்காற்றில் சாலை சாய்ந்தன. அதில் இருந்த மின்வயர்கள் அறுந்து விழுந்தன. உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், உடனடியாக மின் வாரிய துறை அலுவலர்களுக்கு தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், சாலையில் சாய்ந்து விழுந்த 2 மின் கம்பங்களை சீரமைத்தனர்.

Related Stories: