செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி விடுதி, ஓட்டல் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ளது. இதில், 200 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கு, மாமல்லபுரத்தில் தற்போது முதல் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டங்கள் காவல்துறை சார்பில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் ருக்மாங்கதன், செங்கல்பட்டு டவுன் வடிவேல்முருகன் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் 37 ஸ்டார் ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாமல்லபுரத்தில் மட்டும் 24 நட்சத்திர ஓட்டல்கள் முன்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், மாமல்லபுரத்தில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என்பது குறித்து காவல்துறை மூலம் கணக்கெடுக்கப்படும். ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வெளியாட்கள் வந்து தங்கவோ அல்லது அத்துமீறி நுழையவோ முடியாது.

வெளிநாட்டில் இருந்து வந்து தங்குபவர்களின் பெயர்கள், அறைக்கு முன்பு ஒட்டப்பட்டு இருக்கும். அதில், பெயர் இல்லாதவர்களை ஓட்டல் நிர்வாகம் அனுதிக்கக்கூடாது. போட்டி நடைபெறும் நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். சந்தேகப்படும்படி, வெளியாட்களை கண்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறுவுறுத்தினர். கூட்டத்தில், மாமல்லபுரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தங்கும்விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: