கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

புழல்: புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (45). இவர், அங்குள்ள சிமென்ட் உறைகள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அம்மு என்ற மனைவியும், 18 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். ஏழுமலை வேலை இல்லாத நாட்களில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்தல் மற்றும் கிணற்றை தூர்வாரும் வேலைகளை செய்து வந்தார்.அதன்படி, அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன் (37) என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்வதற்கு நேற்று முன்தினம் மாலை ஏழுமலை உள்பட 2 பேர் சென்றனர். அங்கு, கயிறு மூலம்  கிணற்றின் உள்ளே அவர் இறங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில், அங்கேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளி, அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மயங்கி கிடந்த ஏழுமலையை கயிறு மூலம் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. உடனே, இதுபற்றி புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து, பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி, மயங்கி கிடந்த ஏழுமலையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏழுமலையை பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: