தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு முழு அர்ப்பணிப்போடு இந்திய அரசு செயல்படுகிறது: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:  தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது. இந்த மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஓவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார். செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் பங்களிப்பு உள்ளது.  செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

 தமிழ்மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை, பொங்கல் மற்றும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் கான்ஸ் திரைப்படவிழாவில், தமிழ்நாட்டின் மைந்தரான எல்.முருகன் பாரம்பரிய உடையில் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி பங்களிப்பு செலுத்துவதால் சாலை பணிகள் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். பெங்களுரு - சென்னை விரைவு சாலை இரண்டு முக்கியமான வளர்ச்சி மையங்களை இணைக்கும். சென்னை துறைமுகத்தை மதுரவாயிலோடு இணைக்கும் நான்கு வழி உயர்மட்ட சாலை சென்னை துறைமுகத்தை மேலும் திறன் மிக்கதாக ஆக்குவதோடு மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும். நெரலூரு - தர்மபுரி மற்றும் மீன்சுருட்டி - சிதம்பரம் வரையிலான விரிவாக்கம் மக்களுக்கு ஆதாயங்களை அளிக்கும். 5 ரயில்வே நிலையங்கள் மீள் மேம்பாடு செய்யப்படவிருப்பது இருக்கிறது.

மதுரை - தேனி இடையேயான அகல ரயில் பாதை திட்டம் விவசாய மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க சென்னை கலங்கரை விளக்கம் வீட்டு வசதி திட்டத்தின் படி வீடுகள் கிடைக்கப்பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். நீடித்த மற்றும் சூழலுக்கு இசைவான இல்லங்களை உருவாக்குவதில் மிக சிறப்பான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் ஒரு உலகளாவிய சவாலை நாங்கள் மேற்கொண்டோம். சாதனை படைக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட முதல் கலங்கரை விளக்க திட்டம் மெய்பட்டிருக்கிறது., அது சென்னையில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. திருவள்ளூர் - பெங்களுரு மற்றும் எண்ணூர் - செங்கல்பட்டு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடக மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையோடும் ஒரு பன்னோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் முன்மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும்.

 தலைசிறந்த தன்மையும், நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்திவருகிறது. சமூக மற்றும் புறகட்டமைப்புகளைப் பற்றியே பேசுகிறேன். சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதின் மூலம் ஏழைகளின் நலன் உறுதிசெய்யப்படும். அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. கழிப்பறைகளோ, வீட்டுவசதித்துறையோ, நிதிசார் உள்ளடக்கலோ அது எதுவாக இருந்தாலும் சரி  அது அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர உறுதியாக இருக்கிறோம்.  ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் சென்று சேர்வதை உறுதி செய்ய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். புறக்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தும் போது இந்தியாவின் இளைஞர்கள் தான் அதிகம் பயன்படுவார்கள். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இது உதவுவதோடு செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்க இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்தியாவின் எரிவாயு குழாய் வலைப்பின்னலை விரிவாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிவேக இணையத்தை நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்வதே எங்களுடைய தொலைநோக்கு பார்வை. இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.  இந்த திட்டத்தின் மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்டது. இந்த தொலைநோக்குப் பார்வையை மெய்ப்படுத்துவதை நோக்கி பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆண்டு வரவு, செலவு திட்ட அறிக்கையின் போது 7.5 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பது ஒரு வரலாற்று அதிகரிப்பு.

 தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கே விசாலமான நூலகம், மின்னனு நூலகம், கருத்தரங்கு கூடங்கள், பல்லூடக அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பனாராஸ் இந்து பல்கலைகழகத்தில் தமிழ் படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதிக்கான ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்திய மொழிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப, மருத்துவபடிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க இயலும். தமிழக இளைஞர்கள் இதனால் பயனைடைவார்கள். இலங்கை மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறது. நிதிஉதவி, எரிபொருள்,  மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் இலங்கைக்கு இந்தியா அளித்து வருகிறது.  வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ்மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுவருகிறது. இலங்கைக்கு பொருளாதார உதவிகள் வழங்குவது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசிவருகிறது.

இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றிற்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். முதல் இந்திய பிரதமராக சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் பயணம் சென்றிருக்கிறேன். இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் உடல்நலம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சுதந்திரத் திருநாள் அமிர்த பெருவிழாவை நாம் இப்போது தான் கொண்டாடிவருகிறோம். 75 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் நாம் நமது பயணத்தை தொடங்கினோம். நமது நாட்டிற்காக நமது சுதந்திர போராட்ட வீரர்கள் பல கனவுகளை கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை வளமானதாக மாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இலங்கைக்கு பொருளாதார உதவிகள் வழங்குவது  தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசிவருகிறது. இலங்கையில்  ஜனநாயகம்,ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றிற்கு ஆதரவாக இலங்கை  மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.

பாரதியார் பாடல் வரி

தமிழ் மற்றும் தமிழர்களின் திறமை குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசி கொண்டிருந்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறள் உள்பட ஏதாவது ஒன்றை சுட்டிகாட்டி பேசுவார். அந்த வகையில் சென்னையில் நடந்த விழாவில்,

‘‘செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’’  என்ற பாரதியாரின் பாடலை பாடினார். இதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories: