கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னை வந்த பிரதமருக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்க பாஜ சார்பில் சென்னை விமான நிலையம் முதல் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வரை சாலையின் இருபுறமும் கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை முழங்கவும், செண்டை மேளம் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழக பாஜ துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து ‘ஐஎன்எஸ் அடையாறு’ கடலோர காவல்படைக்கு சொந்தமான இறங்கு தளத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கம் புறப்பட்டார்.

அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜவினர், பொதுமக்கள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பிரதமர், சாலையோரங்களில் கூடியிருந்த பாஜ தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் காரிலிருந்து இறங்கி சிரித்தபடியே அனைவருக்கும் கையசைத்தார். பிரதமரின் கார் சாலையில் ஊர்ந்தே சென்றது. மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடியின் கார் மீது ரோஜா மலர்கள் தூவப்பட்டது. பிரதமர் வருகையால் அவரை வரவேற்க கண்கவரும் குழந்தைகளின் அழகிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியால் சென்னை சாலைகள் வண்ணமயமாக காட்சி அளித்தது.

காரை நிறுத்தி குழந்தைகளின் பரதநாட்டியத்தை ரசித்த மோடி

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தமிழக பாஜ கலை கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா ஏற்பாட்டில் சுமார் 500 குழந்தைகள் பங்கேற்ற சிவதாண்டம் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. பிரதமர் வாகனம் அந்த வழியாக மெதுவாக சென்ற போது அங்கிருந்த செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து பிரதமர் ேமாடி உடனடியாக வாகனத்தை நிறுத்த சொன்னார். அவர்  சுமார் 15 நிமிடம் வாகனத்தில் ஏறி நின்று குழந்தைகளின் நிகழ்ச்சியை பார்த்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார். மேலும் குழந்தைகளையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Stories: