பாஜ நிர்வாகி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது

* தந்தை, மகன்கள் மீது 48 வழக்குகள்

* சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை: பாஜ பிரமுகர் பாலசந்தர், எங்கள் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாததால் அவரை வெட்டி கொலை செய்தோம். ஏற்கனவே பல கொலைகள் செய்துள்ளதால், அத்துடன் இதுவும் ஒன்றாக இருக்கட்டும் என்ற மனநிலையில்தான் அவரை கொன்றோம் என்று  கைது செய்யப்பட்ட ரவுடி சகோதரர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர்(30), பாஜ எஸ்சி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். அவர் மீது 2 கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகர் எப் பிளாக் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகன் மகன்களான பிரதீப், சஞ்சய், அவரது நண்பர்களான கலைவாணன், ஜோதி ஆகியோரை சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் தனிப்படை கைது செய்தது.  ரவுடி பிரதீப் மீது கொலை முயற்சி உள்பட 19 வழக்குகள் உள்ளது. சஞ்சய் மீது கொலை உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.  மற்றவர்கள் மீது தலா ஒரு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.

அப்போது பாஜ பிரமுகர் பாலசந்தரை கொலை செய்தது குறித்து முக்கிய குற்றவாளிகளான பிரதீப், சஞ்சய் ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:எங்கள் தந்தை தர்கா மோகன் மீது மட்டும் 20 கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. அவர் சிந்தாதிரிப்பேட்டையில் பிரபல ரவுடி. முதலில் பாலசந்தர் எங்களிடம்தான் இருந்தார். எங்கள் தந்தைக்கு 57 வயது ஆவதால், சிந்தாதரிப்பேட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள ரவுடி பாலசந்தர் 5 ஆண்டுகளாக முயன்றுவந்தார். மேலும், பாலசந்தரின் தலையீட்டால் எங்களுக்கு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கடைகளில் வந்த மாமூலை தடுத்துவிட்டார். 2019ம் ஆண்டு எங்கள் தந்தை மீதான வழக்கில் பாலசந்தர் கொடுத்த அழுத்தம் காரணமாக, எங்கள் அம்மாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த எங்கள் அம்மா பத்மாவதி போலீசாரை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார். இதனால் எங்களுக்கும் பாலசந்தருக்கும் 2019ம் ஆண்டில் இருந்து தான் முன்விரோதம் ஏற்பட்டது. பாலசந்தர் இந்து மக்கள் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கள் சகோதரியின் கணவர் ரவுடி தினேஷ்குமாரையும் முடக்கிவிட்டார்.

மேலும் தன்னை பெரிய ரவுடியாக காட்டிக் கொள்ள, நாங்கள் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கடைக்காரர்களை வைத்து எங்கள் மீது புகார் அளிக்க செய்தார். இந்த புகாரில் தான் நாங்கள் சிறைக்கு சென்றோம். கையில் பணம் இல்லாததால் கடனாக ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வரும் பாலசந்தர் பெரியம்மா மகன் ரூபன் சக்கரவர்த்தியிடம் கேட்டோம். முதலில் அவர் தருவதாக கூறி, பிறகு பணம் தர மறுத்துவிட்டார். அதற்கு பாலசந்தர் தான் காரணம்.

இதற்கிடையே எங்கள் தந்தை தர்கா மோகன் மற்றும் எங்கள் மைத்துனர் தினேஷ்குமார் சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் இரண்டரை கிரவுண்ட இடத்தில் உள்ள 12 வீடுகளை வாங்க முடிவு செய்தனர். அதையும் பாலசந்தர், வசந்தா என்பவர் மூலம் தடுத்துவிட்டார்.  இதனால், எங்களால் அந்த வீட்டை வாங்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 14ம் தேதி சம்பந்தப்பட்ட இடத்திற்கு ெசன்று வீட்டை நாங்கள் வாங்கிவிட்டோம் என்று கூறி காலி செய்ய சொன்ன போது, வசந்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் எங்கள் தந்தை மற்றும் மைத்துனர் ஆகியோர் வசந்தாவை தாக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலசந்தர் மூலம் வசந்தா போலீசில் புகார் அளித்தார். அதில், எனது தந்தை மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.அப்போது தான் நாங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தோம். தந்தை மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தது குறித்து எங்களுக்கு தெரியவந்தது. இதனால் நாங்கள் கோபம் அடைந்தோம்.எங்கள் அம்மா பத்மாவதி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தது. எங்கள் தந்தை தர்கா மோகன் மற்றும் மைத்துனர் தினேஷ்குமார் கைது செய்தது. நாங்கள் மாமூல் கேட்டதாக கைது செய்து என ‘எங்கள் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாமல் அரசியல் அதிகாரத்தை வைத்து போலீசார் மூலம் எங்களை மிரட்டியும், கைது செய்து வந்ததால், நாங்கள் திட்டமிட்டு பாலசந்தரை வெட்டி கொலை செய்தோம்’. பாலசந்தரால் எங்கள் குடும்பம் பல வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் சகோதரி கூட நிம்மதியாக வாழ முடியவில்லை. எங்கள் தந்தை பெரிய ரவுடியாக இருந்தும், எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரவுடியாக இருந்தும் பாலசந்தரை ஒன்றும் செய்ய முடியவில்லை. கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வது எங்கள் குடும்பத்துக்கு புதிதல்ல. எனவே, ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளோம். அதில் ஒன்றாக இது இருக்கட்டும் என்று கருதியே பாலசந்தரை கொன்றோம்.இவ்வாறு குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சேலத்தில் சரண் அடைய வைக்க அழைத்து வந்த பெண் வக்கீல்

கொலையாளிகள் சென்னையை சேர்ந்த பிரபல பெண் வக்கீல் ஒருவரை தொடர்பு கொண்டது தெரியவந்தது. அந்த வக்கீலின் செல்போனை போலீசார் கண்காணித்து வந்தனர். அது சேலம் வழியாக சென்றது தெரியவந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் வக்கீல்தான் கொலையாளிகளை சேலம் அழைத்து வந்து தனது வக்கீல் நண்பர் மூலமாக சேலம் கோர்ட்டில் சரணடைய வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

ஒரு உறையில் ஒரு கத்தி

நாளுக்கு நாள் எங்களுக்கும் பாலசந்தருக்கும் பகை கூடிக்கொண்டே போனது. எனவே இருதரப்பும் சமாதானமாக போக முடிவு செய்தோம். இதுகுறித்து பாலசந்தரிடம் பேச நாங்கள் எங்கள் நண்பர்கள் மூலம் சமாதானம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் அவர், ஒருஉறையில் ஒரு கத்திதான் இருக்கு முடியும், அதுபோல, ‘சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு ரவுடி தான் இருக்க முடியும் அது நான் தான்’ என்று கூறி சமாதானம் பேச சென்ற நபரை திட்டி அனுப்பினார்.

Related Stories: