தமிழகத்தில் 31,500 கோடி மதிப்பிலான 11 திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

* சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட விழா

* ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: சென்னை மதுரவாயல்- துறைமுகம் இடையில் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் உள்பட ரூ.31,500 கோடியில் 11 திட்டங்ளை பிரதமர் மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் ெதாடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டமைப்பு செயல்  திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக(ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம் பைப் லைன் மற்றும் வீட்டு வசதி சார்ந்த திட்டங்கள்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னை வந்தார். இதற்காக மாலை 3.55 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் சென்னை வந்தார். மாலை 4.47 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, தமாகா தலைவர் ஜி.ேக.வாசன், தமிழகம் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன், பாஜ துணை தலைவர் சக்ரவர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 வரவேற்பை முடித்து கொண்டு விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ‘ஐஎன்எஸ் அடையாறு’ என்ற கடலோர காவல்படைக்குச் சொந்தமான இறங்கு தளத்திற்கு வந்தார். அங்கு அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் ‘சிலப்பதிகாரம்’ ஆங்கில புத்தகத்தையும்அவர் வழங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டரங்கம் சென்றார். வழி நெடுகிலும் பாஜ சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேரு விளையாட்டரங்கில் நடந்த பிரமாண்டமான விழாவில் மோடி பங்கேற்றார். விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ₹31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதாவது, சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ₹590 கோடி  மதிப்பில் 3வது ரயில்பாதையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயணிகள் தங்கு தடையற்ற பயண அனுபவத்தை பெறுவதற்காக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும். 75 கி.மீ தொலைவுள்ள ₹506 கோடி மதிப்பிலான மதுரை-தேனி  இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடம் திட்டம். இதன் மூலம் ரயில் போக்குவரத்து விரைவானதாகும். அதன் விளைவாக வேளாண்மை, உள்ளூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு நன்மைகள் கிட்டும். அதனால், வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் ₹116 கோடியில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் திட்டம். இந்த திட்டமானது அதிநவீன தொழில்நுட்பத்தினால் கட்டப்பட்டுள்ளது. ₹849 கோடியில் 115 கிமீ நீளமுள்ள குழாயில் வழியில் எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு  மற்றும் 271 கிமீ நீளமுள்ள குழாய் வழியின் திருவள்ளூர்-பெங்களூரு பிரிவு இயற்கை எரிவாயு  குழாய் திட்டம். இத்திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தூய்மையான, பசுமையான எரிபொருட்கள் வழங்கப்படும். இந்த திட்டங்களை பிரதர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மேலும் ₹14,872 கோடியில் 263 கிலோ மீட்டர் தொலைவுக்கான சென்னை- பெங்களூரு விரைவு வழிசாலை திட்டம், ₹5852 கோடியில் ₹21 கிலோ மீட்டர் தொலைவிலான சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலை இணைக்கும் நான்கு வழிசாலை திட்டம், ₹3871 கோடியில் 95 கி.மீ. தொலைவுக்கான நெரலூருவிலிருந்து தர்மபுரி பிரிவு 4 வழி திட்டம், ₹1428 கோடியில் சென்னையில் பல்வகை வழிமுறைகள் உடன் கூடிய பல்முனை பூங்கா. ₹724 கோடியில் 32 கி.மீ. தொலைவுக்கான மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான இருவழிசாலை திட்டம். ₹1803 கோடியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்நிலையங்கள் மறு சீரமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டங்களின் மூலம் சென்னை- பெங்களூர் இடையிலான போக்குவரத்து நேரத்தில் 2 முதல் 3 மணி நேரம் குறையும். துறைமுகம், மதுரவாயல் 4வழி இரண்டடுக்கு மேல்நிலை நெடுஞ்சாலை காரணமாக சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் வந்து செல்ல முடியும். 5 ரயில் நிலையங்களுக்கான மறு சீரமைப்பால் பயணிகள் வருவதற்கும், வெளியே செல்வதற்காக தனியான பகுதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் சுலபமாக வந்து செல்ல முடியும். மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான இருவழிசாலை திட்டத்தால் இரண்டு புனித ஸ்தலங்களான திருச்சி, சிதம்பரம் இடையே பயணம் நேரம் குறையும். நெரலூருவிலிருந்து தர்மபுரி பிரிவு 4 வழி திட்டத்தால் 20கிலோ மீட்டர் தொலைவு குறைவதுடன், ஓசூர், கிருஷ்ணகிரி பிரிவில் ேபாக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையில் பல்முனை பூங்கா திட்டத்தால்  தங்கு தடையற்ற சரக்கு நகர்வுகளால் சரக்கு சார்ந்த செலவினம் குறையும். முன்னதாக 11 திட்டங்கள் தொடர்பாக குறும்படம் வெளியிடப்பட்டது.

மேலும் கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின்  1152 வீடுகள் திட்டத்தில் பயனாளிகள் சிலருக்கு மோடி நேரில் வீட்டிற்கான சாவியை வழங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். அப்போது அவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.இந்த விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், வரி வருவாயில் உள்ள பிரச்னைகளையும் எடுத்துக் கூறினார். அப்போது உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கலைஞர் கூறிய வாசகத்தை தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் தமிழகத்திற்கு செய்யப்படும் திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி, சென்னை வருகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  தலைமையில் 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள்  மற்றும் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு  காவல் படையினர் என மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் பயணம் செய்த பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை இரவு 7.35 மணிக்கு முடித்துக்கொண்டு அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு இரவு 8.10 மணிக்கு வந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் 5 பேருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர் இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லிக்கு 9.20 மணிக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனித்தனி அறையில் இருந்தனர். பின்னர் பிரதமர் மோடியை இருவரும் வழியனுப்பி வைத்தனர்.

முதல்முறையாக ஒரே மேடையில் பிரதமர் மோடி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றார். தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால், இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் ெபாறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அதுவும் ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 11 திட்டங்களை தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தாய் வாழ்த்து

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை விழா நடந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் பாடலை தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்கள் பாடினர். அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்றனர்.

* ₹598 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்வே வழித்தடம்

* ₹116 கோடியில் கலங்கரைவிளக்கம் செயல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1152 வீடுகள்

* ₹506 கோடியில் மதுரை-தேனி ரயில்வே வழித்தடம் (கேஜ் மாற்ற செயல் திட்டம்)

* ₹849 கோடியில் இயற்கை எரிவாயு குழாய் வழியின் எண்ணூர் -செங்கல்பட்டு பிரிவு

* ₹911 கோடியில் இயற்கை எரிவாயு குழாய் வழியின் திருவள்ளூர்-பெங்களூரு பிரிவு

* ₹14,872 கோடியில் சென்னை-பெங்களூரு விரைவு வழி சாலை

* ₹3871 கோடியில் தேசிய நெடுஞ்சாலை 844ன் நெரலூருவிலிருந்து தர்மபுரி பிரிவு 4 வழி

* ₹724 கோடியில் தேசிய நெடுஞ்சாலை 227ன் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான பிரிவு  

* ₹1428 கோடியில் சென்னையில் பல்வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கக பூங்கா

* ₹5852 கோடியில் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி 2 அடுக்கு மேல்நிலை சாலை

* ₹1803 கோடியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு மறுஉருவாக்கம்.

Related Stories: