களக்காடு மலையடிவாரத்தில் `கொள்ளை’ போகும் தனியார் காடுகள்: கண்டுகொள்ளாத வனத்துறை

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் தனியார் காடுகளாக அறிவிக்கப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால் வனவளங்கள் அழியும் ஆபத்து நிலவுவதாக இயற்கை நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனவிலங்குகள் மற்றும் வனவளங்களை பாதுகாக்கும் பொருட்டு, மலையடிவாரத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தனியாருக்கு சொந்தமான இடங்களை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட தனியார் காடுகள் என்று அறிவித்துள்ளது.

இந்த இடங்களில் தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. அத்துடன் இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது. தனியார் காடுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இடங்களில் தனியார்கள் அரசின் அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள இயலாது. நிலங்களை திருத்த வேண்டுமானால் மாவட்ட கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சமீபகாலமாக தனியார் காடுகள் எந்தவித அனுமதியும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், ‘தனியார் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள மடத்து நிலங்களை வெளியூர் நபர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுகின்றனர். அவர்கள் நிலங்களை திருத்தி விவசாய நிலமாக மாற்றி வருகின்றனர். இதற்காக நிலங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மேலும் மின் இணைப்பு பெறுவதற்காக தனியார் காடுகளாக அரசு அறிவித்துள்ள நிலங்களை விவசாய நிலங்கள் என்று வருவாய்துறையினரிடம் சான்றிதழும் பெற்று விடுகின்றனர். ஏற்கனவே உள்ள விவசாய நிலங்களையும், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகளிடம் இருந்து பறித்து, வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டு மடத்து நிர்வாகம் மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

தனியார் காடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் வனத்துறையினர் அதனை தடுக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் தனியார் காடுகள் பல ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தும் கூட வனத்துறையினர் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கண்டும், காணாமல் இருப்பதாகவும் இயற்கை நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் வனவளங்கள் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தனியார் காடுகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: