கொடைக்கானல் கோடை விழாவில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி

கொடைக்கானல்: கொடைக்கானல் கோடை விழாவில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் கொடைக்கானலை நோக்கி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கும் இந்த 59வது மலர்க்கண்காட்சியில் கார்னேஷன் மலர்களால் ஆன திருவள்ளுவர் சிலை, கார்ட்டூன் கதாபாத்திரமான சின்சான் மற்றும் ஸ்பைடர்மேன் உருவங்கள் சிறு குழந்தைகள் மட்டுமின்றி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மலர் சிற்பங்கள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். முதல்நாளில், ஏரி சாலை பகுதியில் சுற்றுலா துறை சார்பில் ஓவிய புகைப்பட கண்காட்சி நடந்தது.

விளையாட்டுத்துறை சார்பில் பிரையண்ட் பூங்கா பகுதியில் கொடைக்கானல் அரசு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் சுற்றுலாப்பயணிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த மலர் கண்காட்சி துவக்க விழாவை, 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து சென்றனர். இதன் மூலம் பிரையண்ட் பூங்காவில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் வருவாய் கிடைத்தது என தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறினார்.

Related Stories: