மானாமதுரை அருகே இடியும் நிலையில் பயணிகள் நிழற்குடைகள்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம், கழுங்குத்துறை பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள் இடியும் தருவாயில் உள்ளன. இவைகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையை சுற்றியுள்ள மாசிலாமணிபுரம், சந்தனூர்காரைக்குடி, நல்லாண்டிபுரம், குடியிருப்பு, வண்ணானோடை, சந்தனூர்சாலை, கழுங்குத்துறை, ஆலம்பச்சேரி விலக்கு தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மானாமதுரை வந்து செல்கின்றனர்.

 

 இந்த கிராம மக்கள் பயணிகள் நிழற்குடைகளில் காத்திருந்து செல்வது வழக்கம். நல்லாண்டிபுரம், கழுங்குத்துறையில் பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடைகள் பராமரிப்பின்றி இடியும் தருவாயில் உள்ளன. இதனால் பயணிகள் இந்த நிழற்குடைகளில் அமராமல் வெயில், மழையில் நனைந்தபடியே உள்ளனர். எனவே இவைகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாமுவேல் கூறுகையில், ‘இங்குள்ள நிழற்குடைகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. உயிரிழப்பு ஏற்படும் முன் அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: