கேரள சட்டசபையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை கேரள சட்டசபையில் (திருவனந்தபுரம்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 11.30 மணியளவில் திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சபாநாயகர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கனிமொழி எம்பி பங்கேற்பு:  இந்த 2 நாள் மாநாட்டை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் குஜராத் மாநில சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், முன்னாள் எம்.பி. பிருந்தா காரத் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலேயே முதன்முதலாக நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் 17க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், அவரது மனைவி ரேஷ்மா ஆரிப், அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் பலர் வரவேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோரும் வந்துள்ளனர்.

Related Stories: