ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் போராட்டம்!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது போல கல்லூரி மாணவிகளும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மங்களூருவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி முதல் புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடக அரசாணை செல்லும் என்று மார்ச் 15-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு தீவிரமாக அமல்படுத்தியது. கர்நாடக அரசு கொண்டுவந்த சீருடை சட்டம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு 12-ம் வகுப்பு வரை மட்டுமே செல்லும் என்ற நிலையில் பட்டப்படிப்பு மாணவிகள் வழக்கம் போல ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இந்நிலையில் மங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகளும் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் மங்களூருவில் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.                 

Related Stories: