எம்.பி. சீட்டை பெற முடியாமல் சேலத்தில் முகாமிட்ட அதிமுகவினர் ஏமாற்றம்: திரும்பிய தென்மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியை புறக்கணித்த செம்மலை

சென்னை: அதிமுகவில் எம்பி சீட் பெற சேலத்தில் முகாமிட்ட தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சீட் கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் செம்மலையும் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்துள்ளார். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி பதவிக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் திமுகவுக்கு உள்ள 4 இடங்களில், 3 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு உள்ள 2 இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டது.

வேட்பாளர்களை தேர்வு செய் வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோஷ்டியாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தங்களின் ஆதர வாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்பதில் இருதரப்பினரும் பிடிவாதமாக இருந்தனர். ஆனால், சென்னையில் கூடிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு செல்லாமல், சேலத்திலேயே கடந்த 5 நாட்களாக முகாமிட்டிருந்தார்.

மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, தனது மகன் ராஜ்சத்யனுக்கு எம்பி சீட் வேண்டும் என்று கேட்டார். அதேபோல், ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும், தனக்கு எம்பி சீட் வழங்க வேண்டும் என கேட்டார். இவர்களை தவிர வடமாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரும், தங்களுக்கு எம்பி சீட் தரவேண்டும் என ஆதரவாளர்கள் மூலம் கையெழுத்து வாங்கி, கட்சியின் தலைமைக்கு கொடுத்தனர். இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் உள்ளது. அதில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்கள் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. மகனுக்கு எம்பி சீட்டை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என ராஜன் செல்லப்பாவும், அவரது மகனும் ஒருநாள் விட்டு ஒருநாள் சேலம் வந்து கொண்டிருந்தனர்.

தென்மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தும் வகையில், ராஜன் செல்லப்பா மகனுக்கு சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது. ராஜ்சத்யனும் முன்னாள் எம்எல்ஏ இன்ப துரையும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் சேலத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் செம்மலை தனக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று ஆர்வத்துடன் இருந்து வந்தார். ஆனால் சேலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டதால் செம்மலை கடும் அதிருப்தியில் ஆழ்ந்தார். இதனால் கடந்த 5 நாட்களாக சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை செம்மலை சந்திக்காமல் புறக்கணித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தனது நெருங்கிய ஆதரவாளரான தர்மருக்கு சீட்டை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சேலத்தில் 5 நாட்களாக முகாமிட்டிருந்த தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள், கடும் அதிருப்தியோடு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘கட்சிக்காக உழைத்தவர்களை தேர்ந்தெடுத்து சீட் கொடுக்காமல், தங்களது கோஷ்டிக்கு வலுசேர்க்கும் வகையில் ஓபிஎஸ்-இபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் கட்சி மீண்டும் வலுவிழக்கும் என்பது உறுதி,’’ என்றனர்.  அதிமுகவில் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கியதில் மூத்த தலைவர்கள் பலரும் எடப்பாடி, ஓபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories: