இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் எதிரொலி மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை

கொழும்பு: இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது போன்ற நெருக்கடிகளால், ‘வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பி செலுத்த வாய்ப்பில்லை’ என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே அறிவித்துள்ளார். இதனால், இலங்கை திவாலாகி வருவது அந்நாட்டிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது. சுற்றுலா மூலம் அந்நாட்டிற்கு கிடைத்து வந்த அந்நிய செலாவணி அடியோடு நின்று விட்டது.

மேலும், மகிந்த ராஜபக்சே அரசின் தவறான பொருளாதார கொள்கையால், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. எரிவாயு, எரிபொருள் வாங்க அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கையில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு, பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராஜபக்சே அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். இதனால், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவரைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பொருளாதாரத்தை மீட்க ரணில் பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறார். அண்டை நாடான இந்தியாவும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. சர்வதேச நிதியத்திடமும் கூடுதல் கடன் கோரி இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மகிந்த பதவி விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடந்த 9ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது. நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சியினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்நிலையில், கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருவதையடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த இல்லத்தில் 5 மணிநேரம் அவரிடம் சிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் மகிந்த எந்நேரமும் கைது செய்யப்பட்டலாம் என்று தெரிகிறது. மகிந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, மகிந்த மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: