அதானி துறைமுகத்தை கண்டித்து பழவேற்காடு மீனவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்

திருவள்ளுர்: அதானி துறைமுகத்தை கண்டித்து பழவேற்காடு மீனவர்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் வேலை வாய்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுப்பள்ளியில் கடந்த 2008-ம் ஆண்டு எல்என்டி கப்பல் காட்டும் தளம் அதானி துறைமுகங்கள் அமைந்தபோது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கடலோரத்தில் தொழிற்சாலை வருவதால் மீன்வளம், இறால் வளம், நண்டு போன்றவை கிடைக்காது என்பதால் தங்களுக்கு மாற்று ஏற்பாடாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என மீனவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்போதைய தமிழக அரசு மற்றும் நிறுவனங்கள் 1750 மீனவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

இதில் முதல்கட்டமாக 250 மீனவர்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் எனவும், எஞ்சிய 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழவேற்காடு பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆண்கள் அனைவரும் படகுகளில் கருப்பு கோடியை கட்டிக்கொண்டு முகத்துவாரம் வழியாக கடலில் சென்று எல்என்டி கப்பல் காட்டும் தளம் மற்றும் அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களிடம் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.    

Related Stories: