தர்மபுரியில் பரபரப்பு: 11 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

தர்மபுரி: தர்மபுரியில் 11 கடைகளில் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், ₹5 லட்சத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், புரோக்கர் ஆபீஸ் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி 11 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை போடப்பட்டுள்ளது. இங்கு தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பிரிண்டர் மற்றும் உதிரிபாக விற்பனை கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை மேற்கூரையை உடைத்து கடைக்குள் குதித்த மர்ம நபர், கல்லாவில் இருந்த ₹2 லட்சத்தை திருடியுள்ளான். பின்னர், அருகில் உள்ள வீட்டின் அலங்கார திரைசீலைகள் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த அந்த நபர், கல்லாவில் ₹30 ஆயிரத்தை திருடி உள்ளான். தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள மாது என்பவரது பூஜை, அலங்கார பொருட்கள் விற்பனை கடையில் ₹50 ஆயிரம், சந்திரகுமாரின் பம்புசெட் உதிரிபாக விற்பனை கடை, வேலு என்பவரது டூவீலர் உதிரிபாக விற்பனை கடை என 11 கடைகளிலும் மேற்கூரைகளை உடைத்து, உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த ₹5 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளான்.

இதுபற்றிய புகாரின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடையில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை, கடைகளின் மேற்கூரையை ஒரு நபர் உடைத்து உள்ளே இறங்கி, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் கடைகளில் திருட்டு நடந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே, ஒரே நபர் தான் இந்த தொடர் கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 11 கடைகளின் மேற்கூரையை உடைத்து ₹5 லட்சம் திருடப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: