இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதாகிறாரா?

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.பல தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, மகிந்த ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கொதித்தெழுந்த பொதுமக்கள், மகிந்த ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. அரசுக்கு எதிராக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவத்தால் மேலும் கோபமடைந்து ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பினாமிகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சேவின் பூர்வீக வீடுகளும் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 8 பேர் பலியாகி நாடே போராட்டக்களமாக மாறி உள்ளது. இதையடுத்து மே 9ம் தேதி நடந்த கொழும்பு வன்முறை குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் மே 9ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சவிடம் சிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது குறித்தும் காலே மற்றும் கொலுபிட்டியாவில் நடந்த தாக்குதல் குறித்தும் மகிந்தவிடம் சிஐடி போலீஸ் வாக்குமூலம் பெற்றுள்ளது. ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல்பக்சேவிடமும விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறை வழக்கில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: