மாநிலங்களவை எம்.பி. பதவி அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை எம்பி பதவிக்கான அதிமுக வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஆர்.தர்மர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அதன்படி, இந்த தேர்தலில் 4 இடம் திமுகவுக்கும், 2 இடம் அதிமுகவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. அதிமுகவில் கட்சி தலைமைக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் காரணமாக வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகி வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 31ம் தேதி வரை காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் மீது ஜூன் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாபஸ் பெறலாம். 6 பேருக்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூன் 10ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள, சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டுமே போட்டியிட்டால், ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு போட்டியின்றி வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். முதல் நாளான நேற்று முன்தினம் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனு செய்தனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான 2 அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக கடந்த 19ம் தேதி தலைமைக்கழகத்தில் நடந்த மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை, ஆட்சி மன்ற குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் ஆகியோர் நிறுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: