பூந்தமல்லி அருகே பயங்கரம் தலை, கைகளை துண்டித்து கொன்று ஆண் சடலம் எரிப்பு: குப்பைமேட்டில் வீசி தீவைத்தது யார்? போலீசார் துருவி துருவி விசாரணை

சென்னை: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது குப்பை எரிவது வழக்கம். இந்நிலையில், குப்பைக்கிடங்கு அருகில் தலை மற்றும் கைகள் இல்லாமல் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலையங்களில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆவடி காவல்நிலைய எல்லைக்குள் வரவில்லை என்பதால் ஆவடி போலீசார் சென்றுவிட்டனர். பூந்தமல்லி, திருவேற்காடு இரு காவல்நிலைய போலீசாரிடையே மீண்டும் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசாரிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இறுதியாக திருவேற்காடு காவல் எல்லைக்கு உட்பட்டதாக முடிவு செய்யப்பட்டது. திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எரித்து கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், வேறு இடத்தில் கொலை செய்து தலையை வெட்டிவிட்டு சடலத்தை வீசிவிட்டு சென்றார்களா, குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலை ஓரத்தில் தலை மற்றும் கைகள் இல்லாமல் ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பூந்தமல்லி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: