1 முதல் 10ம் வகுப்பு வரை ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பிளஸ் 2 வகுப்புகள் ஜூன் 20ம் தேதி தொடங்கும்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டபடி, 1 முதல் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஜூன் 13 முதல் பள்ளிகள்  திறக்கப்படும். பிளஸ் 2 வகுப்புகள் ஜூன் 20ம் தேதி தொடங்கும். அடுத்த கல்வி ஆண்டை பொறுத்தவரையில் 2023 ஏப்ரல் 3ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வும், மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

அப்போது அவர் வெளியிட்ட முக்கிய பள்ளிக் கல்வித்துறை சார்ந்த செயல்முறைகள் வருமாறு:

* தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, கல்வி இணைச் சான்று, புலம் பெயர்வு சான்று போன்ற 25 வகையான சான்றுகளை நேரடியாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை அல்லது பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் பொதுச் சேவை மையங்கள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிஎஸ்டிஎம் சான்றுகளை வழங்கினார். படிப்படியாக அனைத்து சேவைகளும்  ஜூன் மாதத்துக்குள் இணைய வழியில் பொதுச் சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.

* ஆசிரியர்களின் நிர்வாகப் பணியை குறைக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட பதிவேடுகளை கணினி மயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.  இந்த பணியின் தொடக்கமாக  30 பதிவேடுகள்  மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் இந்த பதிவேடுகளை 2022-23 கல்வி ஆண்டு முதல் நேரடியாக பராமரிக்க தேவையில்லை. மின் பதிவேடுகளாக வைத்திருந்தால் மட்டும் போதுமானது. இதனால் ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். படிப்படியாக ஜூன் 2022க்குள் பிற அனைத்து பதிவேடுகளும் மின் பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

 

* ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களின் பணிசார்ந்த தேவைகளை எழுத்துப் பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக விண்ணப்பித்து வந்தனர். இந்த முறையில் ஏற்படும் சிரமங்களை  நீக்கும் வகையில் ஆசிரியர்கள் தங்கள் செல்போன் மூலம் விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 3 லட்சத்துக்கும் அதிமான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

* ஒவ்வொரு கல்வி ஆண்டும் பள்ளி தொடங்க இருக்கும் நாள், செயல்படும் நாட்கள், தேர்வு, விடுமுறை நாட்கள் என அனைத்து தகவல்களையும் கொண்ட கால அட்டவணை பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ம் கல்வி ஆண்டில் பல்வேறு வகையான ஆசிரியர்களும், மாதந்தோறும் பெற வேண்டிய அடிப்படைத் திட்டம் சார்ந்ததன் விருப்ப பயிற்சிக்காக  கால அட்டவணையையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அளித்த பேட்டி: பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜூன் 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும். ஜூன் 20ம் தேதி பிளஸ் 2 வகுப்பும், ஜூன் 27ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும் வகுப்புகள் தொடங்கப்படும். மேலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022-23) பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி பிளஸ் 2க்கும், 14ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், ஏப்ரல் 3ம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தொடங்கும்.

வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. மாணவர்களுக்கு உரிய மன நல ஆலோசனைகள் வழங்கப்படும். நேற்று நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் பாடத்திட்டம் தாண்டி கேள்விகள் இடம் பெற்றதாக கூறுப்படுகிறது. அதனால் கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். ஒன்று முதல் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30க்கு வர வேண்டும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகம், உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி தொடங்கிய ஒரு மாத காலத்தில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

* அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், வரும் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டி நேற்று வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டன. அதனால் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்நிலை இருந்தது. நேற்று வெளியிடப்பட்ட அடுத்த கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியில் சனிக்கிழமை விடுமுறை நாளாக குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி வரும் காலத்தில் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், நாட்காட்டியை வெளியிட்ட அமைச்சர் பேசும்போது, சனிக்கிழமைகளில் பாடம் நடத்த வேண்டிய தேவை உள்ளது. இதுகுறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த கல்வி ஆண்டில் சனிக்கிழமை விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: