நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி முறைகேடுகள், விதிமுறைகளை மீறி செயல்படும், ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்’ மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, விதிமுறைகளை மீறி நன்கொடைகளை  பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் இதுபோன்ற கட்சிகள் மீதான அதிரடி துவங்கி உள்ளது. கடுமையான நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 3 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், செயல்படாமல் உள்ள 87 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, சின்னங்கள் (1968) விதிகளின்படி அவற்றுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி  இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 796 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

2019ம் ஆண்டு நிலவரப்படி இதுபோன்ற 2,354 கட்சிகளில் 92 சதவீதம், நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதில் 2018-19ம் ஆண்டு 199 கட்சிகள் ரூ.445 கோடிக்கும், 2019-20ம் ஆண்டில் 219 கட்சிகள் ரூ.608 கோடிக்கும்  வருமான வரியில் விலக்கு கோரி உள்ளன. இதில் 66 கட்சிகள் நிதி பங்களிப்பு குறித்த விவரங்களை சமர்ப்பிக்காமல் வருமான வரி விலக்கு கோரி உள்ளன. 87 கட்சிகள் செயல்படவே இல்லை. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதுபோன்ற 2,354 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டன. நிதி பங்களிப்பு விவரம், பெயர் மாற்றம், நிர்வாகிகள் விவரம், முகவரி மாற்றம் போன்றவற்றை ஆணையத்திடம் தெரிவிக்காத இந்த கட்சிகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: