பாக். நடிகையிடம் 20 லட்சம் நெக்லஸ் திருட்டு: கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா பெண் கைது

அஜ்மீர்: தனது இந்திய கணவருடன் அஜ்மீர் வந்தபோது பாகிஸ்தான் நடிகையிடம் ₹20 லட்சம் மதிப்பிலான ‘நெக்லஸ்’ திருடிய மகாராஷ்டிரா பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானிய பிரபல நடிகை நஸ்‌ரீன் குரேஷி, இந்தியாவின் மிகப்பெரிய இறைச்சி வியாபாரி மொயின் குரேஷியை மணந்தார். திருமணத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள டிபென்ஸ் காலனியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நஸ்‌ரீன், தனது கணவர் மொயின் குரேஷியுடன், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் தர்காவிற்கு சென்றார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த, ₹20 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் திருடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள பகுதியில் தேடிப் பார்த்தார். ஆனால், நகை திருடியது யார் என்பது தெரியவில்லை. அதனால், நஸ்‌ரீன் அஜ்மீர் தர்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அஜ்மீர் தர்கா போலீசார் வழக்குபதிந்து, தர்கா வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனையிட்டனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான சில பெண்கள் காணப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய தர்கா போலீசார், அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தனர். ஆனால் அந்த ஓட்டலில் தங்கியிருந்த பெண்கள், தங்களது அறையை காலி செய்துவிட்டு வெளியேறியதாக ஓட்டல் நிர்வாகிகள் கூறினர். ஓட்டலில் அந்த பெண்கள் கொடுத்த அடையாள அட்டை விவரங்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா சென்று அஜ்மீர் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகை நஸ்‌ரீன் குரேஷியின் நகையை திருடியது, அமராவதியை சேர்ந்த சமீனா பர்வீன் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.இதுகுறித்து அஜ்மீர் தர்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் தல்வீர் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் நடிகை நஸ்‌ரீன், தனது கணவர் மொயின் குரேஷியுடன் கான்பூரில் வசிக்கிறார். அவரிடம் திருடப்பட்ட நகை மீட்கப்பட்டதால், அவரை காவல் நிலையத்திற்கு வரழைத்துள்ளோம். நகை சரிபார்க்கப்பட்ட பின்னர், அவரிடம் நீதிமன்ற உத்தரவுபடி ஒப்படைக்கப்படும்’ என்றார்.

Related Stories: