×

இறக்குமதி வரி ரத்தால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 15 வரை குறையும்: வியாபாரிகள் தகவல்

சேலம்: வெளிநாடுகளில் சோயாபீன், சன்பிளவர் ஆயில் மீதான இறக்குமதி வரியை, ஒன்றிய அரசு 2 ஆண்டுக்கு ரத்து செய்துள்ளதால், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.உலகிலேயே சமையல் எண்ணெய் வகைகளை, அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவிற்கு சமையல் எண்ணெய் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரால், சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையான எண்ணெயை ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் அதிகளவில் சப்ளை செய்கிறது. இரு நாடுகளின் போரால் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இந்த நிலையல் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சோயாபீன், சூரிய காந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சன்பிளவர் ஆயில் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:ரஷ்யா-உக்ரைன் போருக்கு முன்பு, ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில் 130 முதல் 140 என விற்பனை செய்யப்பட்டது. போர் தொடங்கிய பிறகு  இந்தியாவிற்கு இறக்குமதி குறைந்ததால் ஆயில், பாமாயில் விலை படிப்படியாக உயர்ந்தது. தற்போது ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில் 190 முதல் 200 என்றும், பாமாயில் 155 முதல் 160 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரிகள், நேற்று(25ம் தேதி) முதல் 2024 மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால், இன்னும் ஓரிரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது.

தற்போது 190 முதல் 200க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில் 175 முதல் 185 எனவும், 155 முதல் 160க்கும் விற்கும் பாமாயில் 140 முதல் 145 வரையும் குறைய வாய்ப்புள்ளது. அதே போல், நல்லெண்ணெய் 260 எனவும், தேங்காய் எண்ணெய் 200 எனவும், விளக்கெண்ணெய் 170 என விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

40 சதவீதம் விற்பனை சரிவு
எண்ணெய் வரத்து சரிவால் சன்பிளவர் ஆயில் ஒரு லிட்டர் 190 முதல் 200 என விற்பனை செய்யப்படுகிறது. சன்பிளவர் ஆயில் விலை அதிகரிப்பால், கடந்த 3 மாதமாக விற்பனை 30 முதல் 40 சதவீதம் சரிந்துள்ளது. விற்பனைக்காக வாங்கி வைத்த எண்ணெய் அப்படியே உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : Cancellation of import tax Cooking oil prices will fall to 15 per liter: Traders Information
× RELATED தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ம் தேதி...