அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 19 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி: குற்றவாளியை போலீஸ் சுட்டு கொன்றது

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்த இளைஞன் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், அங்கிருந்த 19 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேரை சுட்டுக் கொன்றான். இச்சம்பவத்துக்கு அதிபர் பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்து கொள்வது என்பது மனித உரிமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த துப்பாக்கி கலாசாரம் தற்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்பு அதிபராக இருந்த ஒபாமா இதனைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வந்தார். ஆனால் அதன் பிறகு அதிபரான டிரம்ப் துப்பாக்கி கலாசாரத்தை ஆதரித்தார். இதனால் தற்போது இந்த கலாசார மோகம் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.  

இந்த மாத தொடக்கத்தில் இருந்து டெக்சாஸ் நகரின் சூப்பர் மார்க்கெட், நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தேவாலயம் என 3 இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 4வதாக டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.டெக்சாஸ் அருகே உவால்டே நகரில் உள்ள ராப் தொடக்க பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞன் கண்ணில்பட்டவர்கள் மீது ஏஆர்-15 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 2-4ம் வகுப்பு படித்த, 7-11 வயது வரையிலான 19 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளியின் முன் குவிந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் கூறுகையில், ``இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 18 வயது இளைஞன் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 21 பேர் பலியாகினர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவனது பெயர் சல்வடோர் ராமோஸ் என்பதாகும். எதற்காக சுட்டான் என்று தெரியவில்லை,’’ என்றார். இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விட உத்தரவிடப்பட்டுள்ளது.குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள அதிபர் பைடன் சம்பவம் குறி த்து டெக்சாஸ் மாகாண கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

பாட்டியை கொன்ற பிறகு…

சாலைகளில்  பொருத்தபட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, துப்பாக்கி சூடு நடத்திய இளைஞன் சால்வடோர் ராமோஸ், கவச உடை அணிந்து கையில் துப்பாக்கியுடன்  வருவது பதிவாகி இருந்தது. பள்ளிக்கு வருவதற்கு முன்பு, அவனது பாட்டியை  சுட்டு கொன்றது தெரிந்தது.

துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு

அதிபர் பைடன், “எப்போது தான் துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கப்போகிறோம்? இன்னும் சிலர் ‘துப்பாக்கி சுதந்திரத்தை’ ஆதரிக்கிறார்கள். துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், குடிமகனும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர எம்பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: