நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ராஜபாளையத்தில் பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் துவங்கியது

ராஜபாளையம்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபாளையம் பகுதியில் பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று துவங்கியது. வரும் 31ம் தேதி வரை 7 நாட்கள் இப்போராட்டம் நடைபெறும் என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் (மருத்துவ துணி) தயாரிப்பு அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பேண்டேஜ்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில், 40 நம்பர் நூல் ஒரு கிலோ ரூ.200க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.400 என விலை அதிகரித்துள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து, இன்று 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 7 நாட்களுக்கு விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்தனர். அதன்படி இன்று சத்திரப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து விசைக்கூடங்களும் அடைக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், தினமும் ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும். மேலும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நூல் விலை உயர்வுக்கு பஞ்சுகளை பதுக்கி வைத்து விற்பதுதான்தான் காரணம் என உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பஞ்சுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கூலி உயர்வு கோரி தொழிலாளர்களும் ஸ்டிரைக்

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவத்துணி உற்பத்தி செய்யும் பணியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த 1.05.2022ம் தேதி கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் தொழிலாளர்களுக்கு 6 பைசாவும், மாஸ்டர் விவர்ஸ்க்கு 12 பைசாவும் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது வரை உயர்த்திய கூலியை வழங்கவில்லை.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடத்திய மகாசபை கூட்டத்தில் அனைத்து கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உயர்த்திய கூலியை வழங்காததை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளரகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் அனைத்து விசைத்தறி கூடங்களையும் நிறுத்தி போராட்டத்தில் தொழிலாளர் சங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: