கடல் சீற்றமாக காணப்பட்டதால் ஒரு வாரம் காத்திருந்து பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்கு கடல் பகுதிக்கு வந்த சரக்கு கப்பல், கடல் சீற்றமாக காணப்பட்டதால் ஒரு வார கால காத்திருப்புக்கு பின்னர், நேற்று பாம்பன் பாலத்தை கடந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சென்றது. மும்பை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஜேக்கப் பார்ஜர் சரக்கு கப்பல் மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடல் பகுதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. 28 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலம், 362 டன் எடை கொண்ட இக்கப்பல் வந்த நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல், பலத்த காற்று மற்றும் மிகவும் சீற்றத்துடன் இருந்தது.

இதனால் கப்பல் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக பாம்பன் கடலில் காற்றின் வேகம் தணிந்து காணப்பட்டது. இதனால் நேற்று பிற்பகல் பாம்பன் ரயில் பாலத்திலுள்ள ஷெர்ஜர் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இழுவை கப்பல் உதவியுடன் ஜேக்கப் பார்ஜர் சரக்கு கப்பல் பாம்பன் பாலத்தை கடந்து, பாக் ஜலசந்தி கடல் வழியாக எண்ணுர் துறைமுகம் நோக்கி சென்றது. ஷெர்ஜர் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு கப்பல் கடந்து சென்றதை பாம்பன் சாலைப்பாலத்தில் நின்றிருந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Related Stories: