லால்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் துவக்கி வைத்தனர்

லால்குடி: லால்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சுந்தரவல்லி தாயார் உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான இது 108 வைணவ தலங்களில் நான்காவது தலமாகும். இங்கு ஆண்டுதோறும், வைகாசி விசாகம் அன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக பல நூறு ஆண்டுகளாக திருத்தேர் நிறுத்தப்பட்டு, தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்து விட்டது.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு, ரூ.50 லட்சம் செலவில் அத்தி மரத்தில் 33 அடி அகலம், 27 அடி உயரம், 4 டன் எடை கொண்ட அழகிய தேரை உருவாக்கினர். தேர் தயார் செய்து 2 ஆண்டுகளாகியும், கொரோனா காரணமாக வெள்ளோட்டம் விடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி புதிய தேருக்கு பூர்வாங்க பூஜைகள் நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை நடைபெற்றது.

 வெள்ளோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் மாரிமுத்து, கல்யாணி மற்றும் ஆர்டிஓ வைத்தியநாதன், தாசில்தார் ஜெசிலினா சுகந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரமணி, பவித்ரா அருண் காந்தி,சுதா சித்ரசேனன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோயிலில்  முதல் பிரமோத்சவம் வரும் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories: