44 கிலோ கஞ்சா பிடிபட்ட விவகாரம் டிரைவர் கைது; சொகுசு கார் பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் ஓட்டம்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது மங்களபுரம் பகுதியில் 3 பார்சலுடன் நின்றிருந்த இருவரை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது ஒருவர் தப்பிவிட மற்றொருவர் பிடிபட்டார். பார்சல்களில் இருந்து 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தபோது கைது செய்யப்பட்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (24) என்று தெரிந்தது. இவர்கள் சேலத்தில் இருந்து குழுவாக ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு சேலத்திற்கு காரில் செல்ல இருந்தது தெரியவந்தது. தினேஷ் பிடிபட்டது அறிந்ததும் காரில் வந்திருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில், புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி, சேலத்துக்கு செல்லும் வழியில் உள்ள  அனைத்து சுங்கச்சாவடி, சோதனை சாவடிகளுக்கு சொகுசு காரின் பதிவு எண் மற்றும் தினேஷிடம் இருந்து அவரது செல்போனில் பதிவாகியிருந்த மற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் வந்தவாசி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சென்னை எம்கேபி. நகர் பகுதியை சேர்ந்த மோகனை (23) கைது செய்துவிட்டு புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோகனை சென்னைக்கு கொண்டுவந்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘எங்களை போலீசார் பின்தொடர்வதை தெரிந்ததும் என்னுடன் வந்திருந்த யோகராஜ், பிரகாஷ், இந்துமதி ஆகியோரை வந்தவாசி பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டுவிட்டு பஸ்சில் செல்லும்படி கூறிவிட்டேன்.  இதன்பிறகு நான் ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்துவந்தபோது போலீசில் மாட்டிக்கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மோகனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யோகராஜ், பிரகாஷ் இந்துமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: