பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி 5 அடுக்குப் பாதுகாப்பு: டிரோன்கள் பறக்க தடை..!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி 5 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை(வியாழக்கிழமை) பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகை தருகிறார். இதற்காக அன்று மாலை 3.55 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானபடைக்கு சொந்தமான விமானத்தில் சென்னை வருகிறார். 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு செல்கிறார். பிறகு பலத்த பாதுகாப்புடன் காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகிறார். அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணி அளவில் காரில் புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். இரவு 7.40 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் சென்னையில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022) சென்னை வருகை புரிகிறார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளரர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144ன் கீழ்,

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (26.05.2022) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Stories: