இயந்திரம் உதவியுடன் ரூ.10க்கு மஞ்சள் பை வழங்க திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பில் புதுக்குளம் பூங்கா புனரமைப்பு செய்யப்பட உள்ளதை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையை மேம்படுத்துவதற்கு இ-கம்யூட் என்ற திட்டம் துவங்கியுள்ளது. இதில் நடைபயிற்சி மேற்கொள்வது, இ- பைக்குகளை பயன்படுத்துவது. மிதிவண்டிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் நோக்கம்.

மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் வெற்றி அடைந்துள்ளோம். விரைவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இயந்திரம் மூலம் 10 ரூபாய்க்கு மஞ்சள் பை கொடுக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் இலவசமாக மஞ்சள் பை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடக்கம் தான். இது மிகப்பெரிய வெற்றி பெறும். திருநெல்வேலியில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்வதற்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகள் மீது கடந்த ஓராண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல குவாரிகள் மூடப்பட்டுள்ளது.

Related Stories: