ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் மங்கிபாக்ஸ்: சுற்றுலா வந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தகவல்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக மங்கிபாக்ஸ் எனும் குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ஆபிரிக்க பகுதியில் இருந்து சுற்றுலா வந்த 29 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பதிவாகியதையடுத்து செயல்படுத்தப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் ஆரம்பகால கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில் உலகளவில் குரங்கு அம்மைநோய் பரவுவதை கண்காணித்து வருகிறோம். அதே சமயம் உள்ளூர் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்

வைரஸ் பரவுவதைத் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகளை புகாரளிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். மே 24 நிலவரப்படி , உலக சுகாதார அமைப்பு 250- க்கும் மேல் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் குரங்கு அம்மைநோய் தொற்றுகளை பதிவு செய்துள்ளது.

இது முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் உருவாகியுள்ளது. எப்போதாவது மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. காயங்கள் , உடல் திரவங்கள் , சுவாச நீர்த்துளிகள் மற்றும் அசுத்தமான படுக்கை போன்றவை மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: