பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பியோடிய தாய்: போலீஸ் விசாரணை

ஓசூர்: கடந்த 16 ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஓசூர் கொல்லர் பேட்டையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததோடு மூச்சுவிடுவதில் சிரமப்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனையின் சார்பில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு வார்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் தாயார் ஐஸ்வர்யா கடந்த 22 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அவரை காணவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனையின் சார்பில் போலீசில் புகார் தரப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சொந்த ஊராகக் கொண்டவர் என்பதும் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. இதனால் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் காணாமல் போன அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: