ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்றதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். பலியான பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் ராமேஸ்வரம்-பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின், 45 வயதான மனைவி, தினமும் வடகாடு நரிக்குழி கடல் பகுதியில் கடல்பாசி சேகரிக்க காலையில் சென்று விட்டு மதியம் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை 8 மணியளவில் சாப்பாடு பாத்திரத்துடன் கடல் பாசி சேகரிக்க நரிக்குழி கடற்கரை பகுதிக்கு சென்றார். பின்னர் வழக்கமான நேரத்தில் வீடு திரும்பவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இவரது கணவர், மாலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். மனைவி இல்லாததால், வடகாடு கடற்கரை பகுதிக்கு சென்று தேடினார். காணவில்லை. உடனே உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த உறவினர்களும், கிராம மக்களும் தேடினர். பின்னர் ராமேஸ்வரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே வடகாடு நரிக்குழி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் இறால் பண்ணையில் வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீது சந்தேகம் உள்ளதாக, கடல்பாசி சேகரிக்க செல்லும் பெண்கள் தெரிவித்துள்ளனர். உடனே இரவு 8 மணியளவில் இறால் பண்ணை உள்ள பகுதிக்கு அருகிலுள்ள முள் காட்டில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தேடினர். அங்கு காணாமல் போன பெண் அணிந்திருந்த செருப்பில் ஒன்று கிடைத்தது. முட்புதர்கள் நிறைந்த பகுதிக்குள் தேடிய போது, அவரது சாப்பாட்டு பாத்திரம், பாசி சேகரிக்க முகத்தில் மாட்டும் கண்ணாடி, மற்றொரு செருப்பு ஆகியவை அங்கும், இங்குமாக சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே அப்பெண்ணின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நிர்வாணமாக கிடந்தது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, தீ வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த ஒடிசா மாநில ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். போலீசார் சம்பந்தப்பட்ட ஊழியர்களை மீட்டு தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

அப்பெண்ணின் உடலை மீட்ட போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் உடற்கூறு பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த இறால் பண்ணை ஊழியர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நேற்று காலை பண்ணையில் இருந்து வெளியே வந்த இவர்கள் 6 பேரும், பின்னர் மதியம் ஒரு மணிக்கு மேல்தான் பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒடிசாவுக்கு ரயிலில் செல்வதற்காக அவசர அவசரமாக நேற்று மாலை 6 பேரும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மீனவ பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட தகவல் ராமேஸ்வரம் முழுவதும் பரவியது. இன்று காலை உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம்-பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக, தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் சேரான்கோட்டை, கரையூர், முகுந்தராயர்சத்திரம், ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கேலி செய்து தொல்லை: பெண்கள் ஆவேசம்

வடகாடு பகுதியில் இறால் பண்ணையில் வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கடல் பாசி சேகரிக்க செல்லும் பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன். இது குறித்து மீனவ பெண்கள், கிராம பெரியவர்களிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பும் அவர்கள் தங்களை கேலி, கிண்டல் செய்தனர் என்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Related Stories: